Tuesday 28 February 2012

கற்பம்


வெள்ளிரதமொன்று
ஆடைப்பூண்டு வந்தது
என் அருகில்
பள்ளியறை வாசம் செய்ய...


ஜன்னலோரம் வெண்ணிலாக்காய...
என் கண்ணோரம் தேன்பலா
வந்து நின்றது நாணம்காய...
அழைப்புவிடுத்தது...
இன்பத்தில்தோய!


ஆனந்தத் தாண்டவமாட
வேண்டாமே ஆடை...
ஒரு குடையென
எடுத்துடுத்தவா என்னை
காத்திருக்கிறேன் உன்னை...


அரங்கத்தை...
திரைக்கொண்டு மூடினால்...
அரங்கேற்றம் எங்கே செய்வதுப்பெண்ணே?
அக்னியில் நான்குளிக்க...
மழையெனவா இன்னே!


இதோ தொடங்கப்போகிறேன்...
ரதியின் ஓவியக் கண்காட்சி...
என்னுளிருக்கும் மன்மதனுக்காக...
நன்றிதெரிவித்துவிட்டேன்...
படைத்த பிரமண்ணுக்காக!


இடையினம் கவரும் பட்டு வேண்டாம்...
அதைத்தாங்கும்...
சுமைத்தாங்கியும் வேண்டாம்...
மெல்லினங்களை...
விடுதலைச்செய்ய...
காப்புகள் வேண்டாம்!


வேண்டாமென்று எடுத்தப்பொருள்களுக்குள்...
வேண்டுமென்றிருக்கும் அர்த்தங்கள்தான் எத்தனை....
உயிருள்ள ஓவியமென்று
நினைத்தேன் உன்னை...
உயிரெடுத்து உயிர்க்கொடுக்கும்காவியமென...
அனைக்கவா...அணைக்கவா...
என்னை!!

Monday 27 February 2012

தனிமை


நேரமாகிறது...
காத்திருக்கிறேன்...
திருப்பி அனுப்பிவிடுவாயென
உன்னோடுத் தங்கிவிட்ட
என் நிழலுக்காக!!

Sunday 26 February 2012

மோகம்


ரவிவர்மன் ஓவியம் ஒன்று
பள்ளியறை வந்தது...
பல்லவன் உளி செதுக்க!
மேலாடை விலக்கி
தாலாட்டுப்பாட...
பாலாடை நான்காண..
முத்தாடும் உன் நானம்!
பூமிக்கு வந்த கோலம்...
பூண்டிருக்கிறாய் ஒருமுறைக்கூட
என்னோடு கூட!

Saturday 25 February 2012

மறுபிறவி


விழிவழி நின்றேன்
அருவி நனைக்க...
செவிவழிச் செய்தி
பிறவி உரு குலைக்க...
வந்தாயென்றேன் வரவில்லையென்றேன்...
வந்தும் வராமல்நின்றாய்...
என் உச்சமாக!!

பரிதாபம்


விழிகள் 
அள்ளி எடுத்ததை...
இதழ்கள்
ஊற்றி கொடுக்க...
கரங்கள்
பாவம் காத்துக்கிடந்தன...
சுரங்கள் பாட!!!

விருந்து


விரல்கள்கொண்டு
விரதத்தை மீட்டினாய்
எழுந்த நாதத்தில்
நாட்டியம் பயின்றன
இரவுகள்...
அரங்கேற்றமாயின
தாகங்கள்
மௌனமேடையில்
சுவாசத் தாளங்களோடு!!!

நன்றி


எழுதாதப் பக்கங்கள்
வாய்க்க...
திருத்தங்கள் செய்துவிட்டு
வெளியீட்டு விழாவிற்கு
அழைப்பு அனுப்பிவிட்டாய்
வருகவென்று!!!

பட்டதாரி


உயிர் எழுத்துக்களை
விழியில் கற்றேன்... 

மெய் எழுத்துக்களை
உணர்வில் கற்றேன்... 

வல்லினத்தை...
வளையும் நாணத்தில்
பயின்றேன்... 

மெல்லினத்தை...
மிளிரும் இதழோரத்தில்
பயின்றேன்... 

இடையினத்தை...
இடமும் வலமும்
படித்தேன்... 

ஒருமையை...
சிறியப் புல்லியில்
கண்டேன்... 

பன்மையை...
அரிய பந்துகளாக
கண்டேன்.... 

உயிர்மெய்யை...
உயிரூற்றி
மெய்க்கலந்த
தருணத்தில்...
பயின்று, கற்று...
பட்டமும் பெற்றுவிட்டேன்...
உணர்ச்சி உருவமெடுத்த
உவமை உன்னிடத்தில்!!!

சகுணம்


விடியக் காலையில்...
பசுக் கன்றோடு
போகக் கண்டேன்..
ஒரு கனம்போலும்
நினைக்கவில்லை...
அடுத்த நிமிடம்...
குஞ்சினோடு...
உன்னை காண்பேனென்று...
திலகமிழந்த நிலவென!!!

குலுக்கம்


இதழ் விரித்து
உள்வாங்கியது என்னை...
காதல் பூகம்பம்!
விழுங்கிவிட்டு...
சிரிக்கிறது...
மோக அகம்பாவம்!!

தீர்மானம்


உணர்வுகள் சம்மதிக்கவில்லை...
உணர்ச்சிகள் சமாதானம் ஏற்கவில்லை...
உள்ளம் படும் பாடு
உயிருக்குப் பிடிப்படவில்லை....
எனினும்...
ஊற்றெடுக்கும் முயற்சியில் நானும்...
உருவெடுக்கும் தவத்தில் நீயும்!!!!

ஈரம்


நீராடும் நீர்குடமே
நின்றாடும் வரைப்படமே...
நீர்ப்போக நிலையில்லை...
நிறுத்திவைக்க வலையில்லை!
நித்தம் நீ என்னைவிட்டு
நீந்திச் செல்லும் தூரம்...
நத்தையெனப் பின் தொடர்ந்தேன்...
நாலுவார்த்தை சுமந்து நின்றேன்!
நீர்குமிழி நீந்திவர...
நனைந்ததுச் சாரல்...
நிரம்பிவந்த மழையில்!!

ஜீவன்


பனிவிழும் சோலையில்
பாறைகள் பொங்கக் கண்டேன்... 

விரிந்தப் பூக்கள்
உதிரக் கண்டேன்.... 

வீசியக் காற்றின் 
தன்மை மாறக்கண்டேன்... 

பேசிய மொழிகள்
ஊமையாகக் கண்டேன்...


தீண்டியக் கைகள்
முடமாகக் கண்டேன்...


விட்டுப்போய்விடுமோ!!! 

அச்சத்தை மறைக்க...
மிச்சத்தைக் கொண்டு
மீண்டும்...
மிகவும்...
நேசித்தேன்.... 

இருந்தும்.... 

எறிந்துப்போன
சாம்பலில்
மௌனம்....
காக்கிறாய்! 

அமர்ந்திருந்த சிம்மாசனம்....

இல்லாமல்போகக்
காத்திருக்கிறது!!!

முயற்சி


கண்கள் நீராட்டும்...
இதழ்கள் சிரிக்கும்...
கைகள் அனைக்கும்...
கால்கள் மண்டியிடும்...
காதல் பொங்கும் போது....!


மேல் குறிப்புகள்...
உருமாறும்...
காதல் நசுங்கும் போது....!


தாய்மைக்கு...
பிரிவு இல்லை
புவியில்...


தாய்மை உணர்வோடு
விதைக்கும் காதலுக்கும்....
மரணமில்லை
இதயங்களில்!


முயலுங்கள்...
மனிதர்களே!!!!

அடிமை சாசனம்


 வாழைத்தண்டு கால்களில்
கொலுசுக் கண்டேன்...
இன்னும்...
ஒர் சலங்கையாக
கோர்க்கவா...
என் சிறிய இதயத்தை?


பூம்மேனி கவர்ந்த...
ஆடைகள்...
சணலில் கண்டேன்...
கொடியாகக் கட்டவா
நினைவுகள் ததும்பும்...
என் நரம்புகளை?


என்னை
வேண்டிய விதம் மட்டும்...
நீ சொல்...
உனக்கு 
நான் தருகிறேன்....
விகிதம் வகுத்து...
அடிமை சாசனமாக
என்னை!!!
என் உயிரைக் குடையும்
உன் அர்த்தமுள்ள...
மௌனத்திற்காக!!!

தவறிய தவறு


கண்கள்
நெறிஞ்சி முள்ளுகளோ...
எடுக்க முயன்று
குத்திக்கொண்டேன்!


இதழ்கள்
அக்னி குழம்புகளோ..
அனைக்க முயன்று
அனைந்துவிட்டேன்!


குத்தியதற்கும்...
அனைந்ததற்கும்...
சரியான தவறாகி விட்டதோ?!


பழிக்க வந்தாயோ...
பழிவாங்க துணிந்தாயோ...
பழிக்குப்பழி...
படுகுழியில் வீழ்ந்தாயோ?!


நேற்று மேகமாய்...
இன்று அடமழையாய்...
நாளை சுழலாய்...


வேடங்கள் புனைந்து
மடங்கள் நிரப்புகிறாய்...
சடலங்கள் எண்ணிக்கொண்டுப்போக.....!!!!

காத்திருப்பு


மின்னல் வெட்டி...
இடி இடித்து...
போனாய்...

மழையென...
வரம் வருமென......
..........
காத்திருந்தேன்...
காத்திருக்கிறேன்...
.................
காத்திருக்க...
இருப்பேனா...
........................
விடை அளிக்க......
............
மழை........
வரம்..........
வேண்டும்!!

களம்


பல்லவன் உளி...
தவறவிட்ட சிற்பம்...

அரங்கமேடை...
அலங்கரிக்க...

கருமேகக் காட்டின்
வாசத்தில்...

தொலைந்து...
இருவண்டுகள்...
கருணையின்றி தாக்க...

நாண மூதாட்டி...
தலைமைத் தாங்க...

முத்தக் குஞ்சுகள்...
போட்டிப் போட...

களமிறங்குகிறேன்...

இலக்கணம்
மீறிய இலக்கியம் படிக்க...

தாஜ்மஹால்


காலத்தின் கன்னத்தில்
 வற்றாத...
ஓர் கண்ணீர்த்துளி...
இன்றும்...
மோகனம்
பாடிக்கொண்டிருக்கிறது...
சாசுவதமான...
தெய்வீகக் காதலை
வெண்ணிறாடைப் பூண்டு!!

கட்டளை


நீரோடையில்...
நேற்று நடந்த
தடம் தேட
கட்டளையிட்டாய்...
உனக்குத்தான்
எவ்வளவு நம்பிக்கை
நம் காதலில்!!!

என் செல்லத்திற்கு


தெய்வம்...
என் வீடுதேடி வந்தது...
கேட்க்காத வரமொன்று
தந்துச் செல்ல!
காட்டியக் குறும்புகளை
வர்ணிக்க...
உலக மொழிகளில்
இல்லை வார்த்தைகள்!
இந்த ஜென்மத்தில்...
நெஞ்சோடு சுமக்கிறேன்...
இனியும் ஓர் ஜென்மம்
வேண்டுகிறேன்...
தொப்புள்கொடி உறவாக சுமக்க!
உலக வரலாற்று பக்கங்கள்
காத்துக்கிடக்கின்றன...
உன்பெயரைப் பொறிக்க...
நானும்
காத்துக்கிடக்கிறேன்...
ஆனந்தக் கண்ணீர்வடிக்க!
பிரம்மன் தீட்டிய...
அற்புத ஓவியத்திற்கு...
இந்த
உடன் பிறப்பின்
இனிய பிறந்த நாள் வாழுத்துக்கள்!!!

பயணம்


நேற்று நிலவு
நடந்தப் பாதையில்
கண்கள் தவழ்கின்றன
பாதத் தடங்கள் தேடி...
மீண்டு வந்த ஜீவன்
மீண்டும் துடிக்க நினைக்க...
மண்டியிட்டு வணங்கின
மனம் நட்டக் கனவுகள்...
களையெடுத்ததற்காக!!

ஊடல்

வண்ணங்கள் தீண்டாத
வர்ணனைகள்
கற்பனைகள் தோன்றாத
சிற்பங்கள்
மன்மதனின் அம்புகள்
தழுவாத நிமிடங்கள்
நரம்புகள் தந்தியடித்து
சொர்க்கம் எய்த
ரகசியம் விளக்க
ரதிதேவியின் மௌன நொடிகள்!

5 நிமிடக் காதல்

நான்கு நிமிடம்
கால் கட்டை விரல்...
கோலம் போட...
மூன்று நிமிடம்
விழிகள் தேடுதல்...
வேட்டைப் புரிய...
இரண்டு நிமிடம்
பட்டும் படாமலும்...
என்னை கொல்ல...
ஓர் நிமிடம்
அதரங்கள் புன்னகை...
அபிநயம் பிடிக்க...
கடைசியில்...
மௌனம் பரிசாக...
தனிமைக்குத் துணையாக...
என்னை விட்டு செல்லும்
உன் பாதங்களுக்கு...
வைரத்தில் கொலுசு...
ஆசாரியிடத்தில்!!!

முதல் இரவு

இதிகாசங்கள் காணா
பரிவாரங்கள் சூழ
புராணங்கள் புகழா
பட்டாபிஷேகம் நடக்க
யுகங்கள் உணரா
வரங்கள் கொடுக்க
உயிர்க் குண்டம் எழுப்பி
மெய் நெய் ஊற்றி
மோக யாகம் வளர்க்க
அகம் வழுவிய
தங்கக்கலசத்திற்கு
பூர்ணகும்பம்!!

அவனின் அவள்

என்னென்று அழைக்க
நேற்று கண்ட உன்னை...
மிஞ்சிய நாட்களுக்கு
திருடிக் கொண்டாய் என்னை...
வர்ணிக்க எண்ணி
திக்கு முக்காடி நிற்கிறேன்
பெண்ணே!
யார் நீ? யார் நீ? 
என புலன்கள் கேட்க...
பார் நீ! பார் நீ!
என இதயம் உரைக்க...
தேவதை நீ இருக்க...

கம்பனின் புலமையில்
சிக்காத சிந்தனை நீ!
ரவிவர்மன் சிந்திக்காத
சித்திரம் நீ!
பல்லவர்கள் செதுக்கமறந்த
மாமல்லபுரம் சிற்பம் நீ!
ஷாஜகான் கண்டிருந்தால்...
எழுப்பியிருப்பான்...
கோடி தாஜ்மஹால்கள்!

உயிரும் மெயும் நீயாக...
வரமும் சாபமும் நீயாக...
பிரிவும் உறவும் நீயாக...
தாயும் சேயும் நீயாக...
வரவும் செலவும் நீயாக...
பிழையும் திருத்தலும் நீயாக...
பூமியும் வானும் நீயாக...
காணும் காட்சியெல்லாம்
நீயாக...
நீ மட்டுமாக...
ஜீவன் கரைய வேண்டும்...
உன் மூச்சோடு!!