Sunday 28 February 2010

கலவரம்



பிதுங்கின...
பதிந்தன...
சிவந்தன...
சிலிர்த்தன...
மயங்கின...
முளைத்தன...
வளைந்தன...
விளைந்தன...
ஒலித்தன...
ஒளித்தன...
என்ன யோசிக்கிறாய்?
மேல் குறிப்புகள்...
உன் அதரம் சிந்திய...
அமுதம் செய்த...
கலவரம் என்னில்!!
!

Thursday 25 February 2010

நான்



அழகை வர்ணிக்க
பித்தனானேன்!
அனுபவத்தைப் பகிர
சித்தனானேன்!
வருத்தமில்லை...
அர்த்தமில்லை...
வாய்ப்புமில்லை...
பேதைகளுக்கு விளங்க...
மேதையவள் எழுதியயென்னை!!


Wednesday 24 February 2010

யாசித்தல்

 


பாதை மறந்த காடுகள்...
பாதை அமைத்தோடும் நதிகள்...

கரையை முத்தமிடும் அலைகள்...
அலைகளில் மூழ்கும் வலைகள்...

தேனைச் சிந்தாதப் பூக்கள்...
மகரந்தத்தைச் சிதறும் வண்டுகள்...

காலைப் பனியில் நனைந்த இலைகள்...
குளிர் ஆடைகட்டி நடக்கும் காற்று...

வாத்தியங்களில்லாக் குயில் பாட்டு...
இசைவருட அனுமதிக்கும் மூங்கில் கட்டு...

சூரியனாய் காதலிக்கும் தாமரையை...
பிரதிநிதி களவுக்கொள்ளும் அல்லியை...

இவையெல்லாம்...
இயற்கையின்...
நடை... உடை... பாவனை!

ஆகையினால்...
ரசிக்கிறேன்!

வண்ணக் கோலத்திற்கு...
காத்திருக்கும் விடியல்...
புள்ளிவைக்க அசையும்போது...
சினுங்கும் கொலுசுமணிகள்...

தழுவியே ஆகவேண்டுமென தென்றல்....
பரஸ்பரத்திற்காகக் காதுகளோரம்...
சுருண்டுக் காத்திருக்கும்...
சிறு கொத்துகள்...

மேகங்களிடம் சண்டைப்போட்டு...
நடிப்புக் கோபம்கொண்டு...
சிலை நனைத்து உள்வழித்தேடும்...
குறும்புக்கார மழைத்துளிகள்...

அழகின் சிரிப்பொலிக்கு...
தன் சுவாசம் ஈடில்லையென...
மூலையில் மௌன தவத்தில்...
நிற்கும் குழல்...

எல்லாவற்றிற்கும் மேலாக....

குடியேற்றினால் துடிப்பேன்...
மறுத்தால் நின்றுவிடுவேன்...
மிரட்டல் விடுத்திற்கிறது...
சின்ன இதயம்....

இவையெல்லாம்...
காதலின்...
திமிர்... கர்வம்...அகம்பாவம்!

எனினும்...
யாசிக்கிறேன்...!!!

Monday 22 February 2010

நிலைமை


பாரதம்...
சிறந்த ஜனநாயகம்!!....
செவிகள் துருத்தும் வசனம்...
சுதந்திர தினத்தன்று!
குடியரசு தினத்தன்று!
அர்த்தமற்ற வாக்குகள்...
அடுத்த நாள்முதல்!!
மனிதனின் அறிவு...
அறுவடையாக்கியது...
பணம்...
காவு வாங்கியதோ...
ஜனநாயக வயலில்...
விளைந்த ஜனப்பயிர்களை...
சிலவாகயிருந்து...
பலவாகியிருக்கும் களைகள்!!
காகிதம் எறிந்தால்...
ஏழைச் சந்தையே விலைக்கு...
பேரமில்லாமல்!!
சில நூறு...
காந்தித் தாத்தாப் படங்கள்...
மின்னும் குடங்கள்...
குடலருக்கும் குப்பிகள்...
ஏலத்தின் முடிவில்
ஆயிரக்கணக்கான...
கள்ளவோட்டுகள் பெட்டிகளில்!!
நாளை திருவோடு நிரந்தரம்...
அறியாது...
இன்று உரிமைகள் தரமில்லாமல்...
விற்பனை...
நேற்றே வரிசையில் வெட்கமில்லாமல்...
அதையும் வாங்க!!
கட்சிக் கொடிகள்...
இயற்கையின்...
ஒரு வண்ணம் குறையாமல்!
சின்னங்கள்...
உயர்திணையில் மனிதன் தவிர்த்து!
அஃறிணையில் பிணம் தவிர்த்து!!
லட்சக்கணக்கான வோட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி- பொருத்தமாகயில்லை...
லட்சக்கணக்கான கள்ளவோட்டுகள்
குவித்ததில் வெற்றி- அர்த்தமாகயிருக்கும்!
விரலில் வைக்கும் அடையாளப்புள்ளி...
அந்த நபருக்கு வைக்கும் முற்றுபுள்ளி...
இது தெரியாமல்...
ஆட்டமென்ன, ஓட்டமென்ன??
துள்ளித்துள்ளி!!!
இரக்கமில்லாமல்...
வாரிக்கொண்டுப் போனாயே
பால்மனமாறாத பிஞ்சுகளை அன்று...
நிம்மதியுறக்கம் தந்து...
சுரண்டிக்கொண்டுப் போகமாட்டாயோ...
அரசியல் போர்வையில்...
உணர்ச்சியற்ற சவங்களை...
சுனாமியே... இன்னும் ஒரே முறை வந்து?!!!
மன்னனின் குற்றம் தண்டிக்க...
மதுரையை எரிக்க...
ஒரு கண்ணகியிருந்தாள்!
மாண்புமிகு அரசியல் குப்பைகளையெரிக்க...
எத்தனைப் படைக்கவேண்டுமோ...
அருள்மிகு பிரம்மன்?!!!
அதற்கு முன்...
அவன் பெயரில்...
அடையாள அட்டை அச்சிடாமலிருந்தால்...
கள்ளவோட்டு விழாமல்லிருந்தால்...
பாரதத்தாய் புண்ணியம் செய்தவள்!
படைக்கும் தொழிலோன் அதிர்ஷ்டக்காரன்!!

முத்துக்கள்


கருமுத்துக்கள் சுமந்த...
மீன் விழிகள்!
வெண்முத்துக்கள் மூடிய...
பவழ இதழ்கள்!
மச்சமுத்துக்கள் தாங்கிய...
சங்கு கழுத்து!
நம் மழலை முட்டத்துடிக்கும் முத்துக்கள்
பொதிந்த கவிதைகள் !
நம் உயிர்...
உரு கொண்டுவளர...
என் ஆண்மை வென்ற...
உன் பெண்மையை
முத்தென உள்ளடக்கிய காவியம்!
அழகே...
எத்தனை எத்தனைச் சிப்பிகள்
உன்னில்?!!!
நான் சொன்னது பகுதி...
சொல்லாததோ கோடி!!
அதிசயங்கள் ஏந்திய...
அபூர்வம் நீ!!

Sunday 21 February 2010

என்னென்று அழைக்க??

கண் பதிந்து விழ
மனம் புரிந்து எழ
அகப்பட்டேன் நின் வசம்!
வானவில் கனவுகள் காட்டி
இமைகள் பிடிவாதம் பிடிக்க
கண்கள் அடைக்கிறேன்...
சூரியன் உறங்குமுன்...
கண்டு மயங்க உன்னை!
உனக்காகவே துடிக்கிறேன்
என்னிடம் இதயம் சொல்ல...
பயணமாகிறேன் திசையறியாமல்
உன் கால் சுவடுகள் தேடி!!
ஒரு மணி கூட்ட...
விண்ணப்பித்துள்ளேன் கால தேவனிடம்...
மனதாலும் நினைவாலும்
அசைப்போட உன்னை!
தனிமையை மட்டும் நேசிக்கிறேன்...
என்னுள் நீ வழுக்கியப் பின்!
வழுக்கும் பாறைகள்
பிடித்தவர்களின் இதயமென...
புரிந்தும் கொண்டேன்!
யாருக்கும், எதற்கும்
அளவு கோலானாய்!
உன்னால்...
ரசிக்க பயின்றேன்...
ருசிக்க கற்றேன்...
வசிக்க முயல்கிறேன்...
அழைக்காமல்...
பதவியேற்றாய்!
கேட்காமல்...
கற்றுக்கொடுத்தாய்!
.............................??

Wednesday 17 February 2010

கவிதைக்கும் ஒரு நேரம்

















கண் சிமிட்டும் நேரத்தில்
உள்ளே நுழைந்து...
இன்ப கலவரம் செய்து...
கொடிப் பறக்கவிட்டாய்...
குருதி உறைய!
தேன் பாரமில்லை பூவுக்குள்...
தனியில்லை நீ என்னுயிருக்குள்!
நடமாடும் கவிதை குறித்து
வார்த்தைகளை அணிவகுத்தேன்...
நாவு ருசிக்க
கவிதையே படிக்க...
அசந்துப்போனேன்
நொடிகளில் மொழி...
உயிர் கொண்டதைக் கண்டு!
அயுள் முழுதும்...
படித்திருப்பேன் காவியத்தை...
உறக்கத்தையும் ஒத்திவைத்து!
மனிதன் பிறப்பும் இறப்பும்...
நூற்றாண்டுகளாக!
காதல் ஜனனம்...
உன் தொட்டிலில்!
மரணம்...
நம் கல்லறையில்!

Wednesday 10 February 2010

ஊமை கனவு















தென்றல் வருடிச் சொன்னதை...
பூக்கள் சிரித்து சொன்னதை...
அலைகள் தொட்டுச் சொன்னதை...
உன் மௌனம்கூட சத்தமாகச் சொன்னதை...
முணு முணுக்கக் கூட முடியவில்லை
என்னால் இப்பொழுது!
காரணம் தேடுகிறாயோ??
காரணம், காரியம்
இரண்டும் நீயாகிப்போன மாயம்
முடிவில் காயம் ஆனதை...
சொல்ல முயன்று முயன்று...
சொல்லாமலே இருக்க.......
........................................
..........................................

Thursday 4 February 2010

என்னருகில் நீ இருந்தால்..


தாயும் தந்தையும்...
இணைந்து பாட...
பிறந்தேன் மெல்லிய சந்தமென!
ஏராளமான பல்லவிகளும்...
தாரளமான சரணங்களும் குவிய
அன்பு விரிப்பில் தவழ்ந்து...
பண்புச் சோலையில் திரிந்து...
மென் மலரென வளர்ந்தேன்!

காலம் கைப்பிடித்துக் கூட்டிச்செல்ல...
வாழ்க்கைப் பாதையில் நடந்தேன்...
உயிருள்ள வெறும் ஜீவனாக!
கைகளை உன் கரங்களில்...
காலம் இடம்பெயர்க்க...
கற்றேன் உலகை...
பெற்றேன் பெண்னெனும் நம்பிக்கையை!
நட்புத் தென்றல் வீசி...
முன்னேற்ற பூக்கள் கொண்டு...
வெற்றி மாலையைச் சூட்டினாய்
எங்கோயிருந்து வந்து!!

சொந்த பந்தங்களுக்கு அப்பாற்பட்டு...
பாச நேச உணர்ச்சிகளைக் கடந்து...
புவியீர்ப்பு சக்திக்கும் மேலாக
ஏதோ ஒன்று ஈர்க்க...
உன் வசப்பட்டேன் நான்!
அதில்...
வருத்தம் துளியும் இல்லை...
பேரின்பத்தை வர்ணிக்கவோ
உலக மொழிகளில் வார்த்தைகளில்லை!!

பிறப்பின் அர்த்தம் கற்றுக்கொடுத்தாய்...
பலர் முன்னிலையில்...
பிரபலமாக்கியும் எடுத்தாய்!
உன்னிடம்...
நான் பட்டக் கடன்...
எண்ணிப்பார்த்தால்...
தீரும் கணக்கல்லவே;
எனினும்...
வேண்டுகிறேன்...
மீண்டும் ஒரு ஜென்மம்...
உன் நட்புக்கு...
கடனாளி ஆக!!!

Tuesday 2 February 2010

என் கனவுத் தோட்டத்தில்

























புவி காணா அழகு
கவி புகழா அற்புதம்
கண் சிமிட்டியது...
ஓர் அபூர்வ மலர்!
அடி மேல் அடி வைக்க...
இதயப் பாலைவனம்
சோலைவனமானதை...
என்னென்று சொல்ல?!!
வார்த்தைகளின்றி வறண்ட இதழ்கள்...
இமை அணை மீறிய விழிகள்...
உயிருக்கும் மெய்யுக்கும் யுத்தம்...
முன்னறிவிப்பில்லா மாற்றங்கள்?!!
அருகில் வந்தது இன்பம்...
வருடியது ஆனந்தம்...
புறமிருந்து அகம் வழுவியது வரம்!!!

Monday 1 February 2010

மயிலிறகு நினைவுகள்

இரெண்டாம் குழந்தைப் பருவத்தையடைந்து...
மூன்றாம் காலில் தவழ்ந்துக்கொண்டிருக்கிறேன்!
வெண்மேகப் பஞ்சு போல்
நரை ஆக்கிரமித்துவிட்டது!
கடல் அலைகள்போல்
சுருக்கம் ஆட்கொண்டுவிட்டது!
நடைமுதிர்ந்து...
எல்லாம் எப்பொழுதும் காணமுடியவில்லை!
உண்ணும் உணவு...
மெய்யின் இஷ்டமாகிவிட்டது!
இருப்பு அதிகரித்து...
நடப்பு குறைந்துவிட்டது!
பொரித்தக் குஞ்சுகள் வளர்ந்துவிட்டன...
அவரவர் பாதையில் பறந்துவிட்டன!
ஆசையாய் அரிசியிட்டுவைத்த மயிலிறகு
கண்ணிர்விட்டுக்கொண்டு...
உன் குழந்தைத் தனத்தை நினைவூட்ட...
நம் மயிலிறகு நினைவுகளை அசைப்போட்டப்படி...
காத்திருக்கிறேன்...
உன்னை மீண்டும் சேர...
துணையாக!!!!


சிரிப்பு


பூஞ்சோலையில் நடந்தேன்...
பூக்கள் முகம் திருப்பிக்கொண்டன!

ரசிக்க எண்ணினேன்...
நிலவு காணாமல் போனது!

கரையில் நின்றேன்...
நதி வற்றிவிட்டது!

சுவாசிக்க முயன்றேன்...
காற்று திசை மாறியது!

பாட நினைத்தேன்...
வரிகள் ஊமையாயின!

வாழ முற்பட்டேன்...
உறவுகள் துண்டித்துக்கொண்டன!

துணைக்கு வர...
நிழலுக்குக்கூட அவமானம்
நிலைமை காரணம்!!

நினைத்த மாத்திரத்தில் கல்யாணம்...
எப்பொழுதும் வாழாவெட்டிக் கோலம்!

உருவாக்கியவர்கள் சிரிக்கிறார்கள்...
சறுக்கி விழுவதைக் கண்டு!!

மனசாட்சி சிரிக்கிறது...
சருகாகி விழுந்ததைக் கண்டு!!!

தேடல்


வார்த்தைகள் தேடினேன்...
நீயானாய்!

ராகம் தேடினேன்...
நீயானாய்!

தாளம் தேடினேன்...
நீயானாய்!

சரணம் தேடினேன்...
நீயானாய்!

பல்லவி தேடினேன்...
நீயானாய்!

பாடல் தேடினேன்...
பிரமித்துவிட்டேன்!!!
நீ மட்டும் உள்ள...
நீ ஆகிவிட்ட...
நானானதைப் படித்துவிட்டு!!!

காற்றில் தொலைந்த குழலோசை


பார்த்தாய்...
பிறந்தேன்!

புன்னகைத்தாய்...
தவழ்ந்தேன்!

அருகில் வந்தாய்...
நடந்தேன்!

வெட்கம் விட்டாய்...
மாணவனானேன்!

கற்றுக் கொடுத்தாய்...
பயின்றேன்!

இங்கனம்...
வளர்த்துவிட்டு...
மௌனமானாய் நீ!

காற்றில் தொலைந்த குழலோசையானேன்...
நான்!

மணியோசை

கருவிழி வண்டுகள் குறுகுறுப்பு
ஆழ்மனதை வட்டமிட...
குடமேந்தி மெல்லிய ராகம்
ஆத்தோரம் நடக்க...
அழகை
சலங்கைகள்
வழியெல்லாம் விவாதிக்க...
தடங்கள்
கல்வெட்டென உருவெடுக்க...
அன்னம்
வருணதேவனின்
வரப்பிரசாதத்தில் இறங்க...
பொன்மஞ்சள் வர்ணம் பூசி
கரையேர...
பட்டுடுத்தி தோகைவிரித்து...
விவாதமும் உருமாறுதலும் தொடர...
முக்கண்ணனின் இல்லமேறி...
மேள அதிபதி செவியில்
ரகசியம் ஓதி...
மூலவனின்
மணியோசை எழுப்பி...
விடையென வரமளித்துவிட்டாள்...
ஜீவ விருக்ஷம் தழைத்தோங்க!!!

கையொடிந்த சிற்பங்கள்

கனவுகள் அவைகளாகவேயிருக்க...
நிஜமும் கருப்பாகவே நடக்க...
உறவுகளின் பள்ளத்தாக்காய்...
உணர்ச்சிகளின் இடுகாடாய்...
உணர்வுகளின் சுடுகாடாய்...
அவமானத்தின் நீர்வீழ்ச்சியாய்...
உவமைக்கு ஒவ்வாத உதாரணமாய்...
அஃறிணையான உயர்திணையாய்...
மானத்தை ஏலம்விட்டு...
கற்பைத் தள்ளுபடிக்கொடுத்து...
பிறந்த இனத்திற்கு விலக்காகி...
காட்டு ஓநாய்களின்
அஸ்தமன அரங்கேற்றத்தில்
ஒலித்துக்கொண்டும் ஒளிர்ந்துக்கொண்டும்
மேடையெங்கும் ஊர்வலம்!
வெறிநாய் பாலுண்ட வர்க்கம்
உளிக்கொண்டுச் செதுக்கியதால்...
உயிர்பெற்று உருக்குலைந்த...
கையொடிந்தச் சிற்பங்கள்...
கல்லறைக்கெங்கிலும்...
ஒருமையில்!!!!

கோவில் புறா


ஆண்மைக்கு அகராதியாய்...
அன்புக்கு இலக்கணமாய்...
வீரத்திற்கு புகலிடமாய்...
அறிவுக்குச் சுரங்கமாய்...
கண்களுக்கு ஓவியமாய்...
இதயத்தின் காவியமாய்...
படைத்து...
தொழிலை முடித்துக்கொண்டான்
பிரம்மன்!

மன்மத அம்புகள் அஸ்திவாரமிட்டு...
காந்தப்பார்வை பூஜைச்செய்து...
உணர்வுத் தூண்கள் எழுப்பி...
உணர்ச்சித் தோரணங்கள் தரைப்புரள...
காதல் மண்டபம் கட்டி...
காம விளக்கேற்றி...
இதயக்கோவில் கும்பாபிஷேகம் செய்து...
பிறந்தப் பயனை அடைந்துவிட்டாய்
நீ!

வெட்கம் வேர்சாய...
கனவுகள் அலைமோத...
பெண்மைத் ததும்ப...
மென்மைத் தத்தளிக்க...
மோகப் புயலில்
நனைந்தச் சிறகுகள் குளிர்க்காய...
சரணடைந்தேன் மண்டபத்தில்...
கோவில் புறாவாக
தலைவனின் கதக்கதப்பில்...
நான்!

கடல் கன்னி

கண்கள் வலை விரித்து...
சிரிப்பு அலைகள் வீசி...
காதல் கடலில் வளித்துக்கொண்டாய்...
கற்பனைக் கரையில் நின்ற குற்றதிற்காக!
வாழ்க்கைப் படகில்...
துணையாக வருவாய் என
நினைத்துக்கொண்டிருக்க...
பிரிவு சங்கை முழங்கிச் சென்றாய்...
கண்ணிரில் கனவுகளை நனைத்து!
எதிர்பார்ப்புத் துறைமுகத்தில்...
நம்பிக்கைக் கப்பலேறி...
ஒற்றை மாலுமியாகக் காத்திருக்கிறேன்...
கதைகள் வர்ணிக்கும்...
கடல் கன்னியாகவாவது வந்து...
வளித்துவிட்டு ரசித்த கடலுக்குள்
நிரந்தரமாக...
இழுத்துச் சென்றுவிடுவாயென!

கோவில் தேர்

நினைவுகள் தோரணங்களாக...
கனவுகள் மாலைகளாக...
உணர்வுகள் ஆபரணங்களாக...
மௌனம் மணியோசையாக...
புன்னகை பிரசாதமாக...
பவனி வருகிறாய்
இதயப்பிரகாரமெங்கும்...
காதல் வடம்பிடித்திழுக்க...
திருக்கோயில் தேர் போல!

தாய் வீடு

புகுந்து வந்து...
உள்ளத்தைக் காதலுக்குக் அற்பணித்து...
பொன்னுடலைக் காமத்திற்கு காணிக்கையாக்கி...
வள்ளுவனின் மூன்றாம் பாலுக்கு விளக்கம் தேடி...
விடையாக...
உயிருக்கு உருக்கொடுத்து...
ஈரைந்து மாதங்கள்
கருவோடுக் காப்பாற்றி...
மருஜென்மமெடுத்து
பெற்றெடுத்தாய் என்னை...
தாய்வீட்டில்!

முடிவு


உன் கண்களை முட்டினேன்...
மணமாலையில் முடிந்தது!
உன் வெட்கத்தை முட்டினேன்...
மழலையில் முடிந்தது!

இக்கரைக்கு அக்கரை..

கொடுத்த முத்தங்களை விட
கொடுக்கப்போகும் முத்தங்களுக்கு...
ருசி அதிகமெனக் கணக்குப்போட்டு...
ஏந்திக்கொள்ள ஏங்கிக்கொண்டிருக்கிறது...
உன் காதல் வசப்பட்ட...
என் காமம்!
இக்கரைக்கு அக்கரை பச்சைத்தானே!

கோபம்


பிரம்மனின் அழகிய
ஓவியம் நீ!
கடுங்கோபம் அவனோடு!
எனக்கு முன் காதலித்துவிட்டானே
உன்னை!

ஜனநாயகம்





நாட்டின் முதுகெலும்பாய்...
பெரும்பாலான குடிமக்களின் எல்லைக்கோடாய்..
ஜனநாயகத்தின் சாபக்கேடாய்...
தங்கக்கோடென மின்னி ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது...
வறுமை கோடு!

மகாத்மா உயிர் உருக்கி வாங்கித்தந்த சுதந்திரம்...
சில அரசியல் ராஜாக்கள்
ஏழை மக்களின் உயிரை உருக்கி...
தேசத்தை கொள்ளையடிக்க மட்டும்
தற்பபோது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது!

காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள...
பெண்களைத் துகிலுரித்துக்கொண்டிருக்கும்
இரக்கமற்ற துச்சாதணன்களைப் பெற்றுவிட்டோமேயென்று
அழுது அழுது கண்ணீரெல்லாம் வற்றி...
வரண்டப் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறாள்...
பாரதத் தாய்!

ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லை...
பல ஏழைகளின் குடும்பத்தில்!
பல கோடிகளுக்குச் சண்டை நடக்கிறது...
சில அரசியல் புனிதர்கள் குடும்பத்தில்!

கோடிகளுக்கு எத்தனைப் பூஜ்ஜியங்களென்றே தெரியாமல் ...
உழைத்து உழைத்து...
தண்டு வலைந்துப்போன நெற்கதிர்களுக்கிடையில்
சில கோடிகள் சேமிப்பில் குறைந்ததென்று...
அடிவயிற்றிலிருந்து அலறிக்கொண்டு ஓடிக்களிக்கின்றன...
சிலச் சுயநலப் பெருச்சாலிகள்!

அரசியல் நரிகளாய் மாறி...
ஏழை மக்களை ஏமாற்றி...
பணத்தையும் மானத்தையும் பறிக்கும் யுக்தியை...
முடிந்தால் அவர்களை...
வாழவைக்கப் பயன்படுத்துங்கள்!

ஜன நியாயமானத் தேவைகள் நிறைவேறுமென்று நம்பி...
பெற்றோர்க்குக்கூடப் பணிவிடைச் செய்யாது...
தொண்டர்களாகி...
கைகளாலும், கால்களாலும் சேவைகள் புரிந்து...
அரசியல் சிம்மாசனத்தில் உங்களையேற்றிவிட்ட...
அந்த ஏணிப்படிகளைப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டாம்...
நொறுக்காமலாவது இருக்கலாமல்லவா?!!

ஜனங்களின் நாயகன்களாக இல்லாவிட்டாலும்
ஜனங்களிடம் நயமாகயிருக்கவாவது...
எள்ளளவு முயற்சிச்செய்யுங்கள்!
கால தேவன் மனமிரங்கி...
உங்களின் பாவக்கணக்கில்...
சிறிதேனும் தள்ளுபடிச் செய்ய...
வழிக்காட்டுங்கள்!!!


ரணங்கள்

உன் நிழலை மட்டும் தான்
உன்னால் கொண்டுச்செல்ல முடியும்
என்னிடமிருந்து...
உன் நினைவுகளை அல்ல!

என் இதயத்தைத்தான்...
எடுத்துச் செல்கிறாய்!
உன் ஈரமற்ற இதயத்தைத்தான்
என்னிடம் அடகு வைத்துவிட்டாயே
நீ காதலித்தக் காலங்களில்!

நீ அடகுதான் வைத்தாயென்று அறியாமலேயே...
எனக்குப் பரிசாகக் கொடுத்தாயென்று
இந்த நிமிடம் வரை...
நான் தான்...
அதை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன்!

இறுதியாக...
நான் கேட்காத வட்டியாக...
நினைவுகள் என்னும் ரணங்களை...
எனக்கு கொடுத்துவிட்டுப் போகிறாய்...
கடன் தீர்ந்ததென்று!

நீ...
எங்கு வேண்டுமானாலும் போ!
ஆனால்...
என்னைப்போல் யாருக்கும்...
கடனாளியாகிவிடாதே!

முதல் காணிக்கை

நாகரீகம் என்ற பெயரில்...
காதலை கொச்சைப்படுத்திவிட்டு
பண்பாட்டை மறந்து
நிதானத்தை இழந்து
தன்னடக்கத்தை விற்று
காலங்காலமாக கட்டிக்காத்த குடும்பமானத்தை,
ஊராரின் நையாண்டிக்கு தாராளமாக அர்ப்பணித்துவிட்டு
தேவைகளைத் தீர்த்துக்கொண்டு...
வேண்டுமா? வேண்டாமா? என்று
நாணமில்லாமல் விவாதித்தார்கள்
நீ முளைத்துவிட்டாய் என்றறிந்து
உன்னை விதைத்தவனும், நிலத்தை விற்றவளும்!
ஆனால்,
விதி நிர்ணயிக்க... காலம் ஒத்துழைக்க...
மக்கள் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டு
நீயே தைரியமாகப் பிறந்துவிட்டாய்
இந்த பரந்த உலகை நேரிட!
பிறகு,
உன் கண்ணீர்த்துளியை மட்டும் ஏன் பிடித்துவைத்திருக்கிறாய்?!!
அதையும் தைரியமாக போகவிடு...
உன் வாழ்க்கைப் போராட்டத்திற்கு..
நீ அற்பணிக்கும் முதல் காணிக்கையாக!!

பிடித்து நின்றுவிட்டால்.


எத்தனை துன்பம் வந்தாலென்ன....
உன்னை போல் பிடித்து நின்றுவிட்டால்..
வாழ்வில் முன்னேறி விடலாம்!

கண்ணீரை பின் தொடர்ந்து.....

அன்று உன் கால்களை பின் தொடர்ந்தேன்...
நீ வசிக்கும் உன் வீட்டின் வழி அறிய!
இன்று என் கண்ணீரைப் பின் தொடர்கிறேன்...
உன் நினைவுகள் இல்லாத வழி அறிய!

காத்திருக்கிறேன்....

அன்பே,
உன் கண்களால் கைது செய்தாய்.....
பொறுத்துக்கொண்டேன்! 
உன் சிரிப்பால் போர் முரசிட்டாய்...பொறுத்துக்கொண்டேன்!
உன் இதழ் சிந்தும் முத்தங்களால் போரிட்டாய்
அதையும் பொறுத்துக்கொண்டேன்!
இப்படி நீயாக வலிய வந்து, என் இதய களத்தில் காதல் போர் தொடுத்துவிட்டு 


சட்டென்று இப்பொழுது மௌனதவத்தில் அமர்ந்துவிட்டாய்?!!! 
இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது!
காரணம் எதுவாயினும் சரி....!
உயிரே,
இந்த உலகை வெறுத்தேன்...
உன் நினைவோடு வாழ!
நான் ஷாஜகான் அல்ல உனக்காக தாஜ்மகால் எழுப்ப!
சாதரண மனிதன்! உள்ளமெங்கும் உன்னை நிரப்பி, அதில் கனவுகளுடன் நீந்துபவன்!
உன் இந்த மௌனதவம்...
நான் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் என் பிழைக்கு நீ தரும் தண்டனையா?!
அல்ல
ஆயுள் முழுவதும் உன்னையே நினைக்க வேண்டும் என்ற உன் பேராசைக்கு நீ கையாளும் யுக்தீயா?!
பதில் அறியாமல் நான் உன்னை விடமாட்டேன்!
காத்திருக்கிறேன் உன் இதய கதவுகளின் வாயிலில்...
நீ எட்டியாவது பார்ப்பாயென்று!