Saturday, 25 February 2012

முதல் இரவு

இதிகாசங்கள் காணா
பரிவாரங்கள் சூழ
புராணங்கள் புகழா
பட்டாபிஷேகம் நடக்க
யுகங்கள் உணரா
வரங்கள் கொடுக்க
உயிர்க் குண்டம் எழுப்பி
மெய் நெய் ஊற்றி
மோக யாகம் வளர்க்க
அகம் வழுவிய
தங்கக்கலசத்திற்கு
பூர்ணகும்பம்!!

அவனின் அவள்

என்னென்று அழைக்க
நேற்று கண்ட உன்னை...
மிஞ்சிய நாட்களுக்கு
திருடிக் கொண்டாய் என்னை...
வர்ணிக்க எண்ணி
திக்கு முக்காடி நிற்கிறேன்
பெண்ணே!
யார் நீ? யார் நீ? 
என புலன்கள் கேட்க...
பார் நீ! பார் நீ!
என இதயம் உரைக்க...
தேவதை நீ இருக்க...

கம்பனின் புலமையில்
சிக்காத சிந்தனை நீ!
ரவிவர்மன் சிந்திக்காத
சித்திரம் நீ!
பல்லவர்கள் செதுக்கமறந்த
மாமல்லபுரம் சிற்பம் நீ!
ஷாஜகான் கண்டிருந்தால்...
எழுப்பியிருப்பான்...
கோடி தாஜ்மஹால்கள்!

உயிரும் மெயும் நீயாக...
வரமும் சாபமும் நீயாக...
பிரிவும் உறவும் நீயாக...
தாயும் சேயும் நீயாக...
வரவும் செலவும் நீயாக...
பிழையும் திருத்தலும் நீயாக...
பூமியும் வானும் நீயாக...
காணும் காட்சியெல்லாம்
நீயாக...
நீ மட்டுமாக...
ஜீவன் கரைய வேண்டும்...
உன் மூச்சோடு!!

முயற்சி

நின்று பார்த்தேன்
நினைவுகள் வரவில்லை...
நடந்துப் பார்த்தேன்
தடம் தெரியவில்லை...
பேசிய மொழிகள்
வழக்கில் காணவில்லை...
பின்னிய உணர்வுகள்
பிரிந்ததை அறியவில்லை...
சிந்தனைகள் சிதைந்து...
சொற்கள் நோயுற்று...
வேர்காண...
நீரில்லா பிரதேசமானது...
விழிகள்...

தீ அனைக்க...
தீண்டி அனைக்க...
தீர்த்தம் கொடுத்து...
தன் நிலை நாட்ட...
தேன் எடுக்க...
இருக்கும்...
உருக்கும்...
வரவு!!

துலாபாரம்

கோடிக் கனவுகள்
வாடிக் கிடக்க
தாளம் தப்பாமல்
பாடிய வானம்பாடி
எஞ்சித் தவழும்
கற்பனைக் கூட்டி

பாதை இட்டு
வானத்தில் செல்ல
பாடிய ராகம்
மறந்துப் போக
தேடிய யோகம்
கரைந்து மூழ்க
வானவில் வண்ணங்கள்
கலைந்து மறைய

உறவுகள் பிரிவுகளாக
மறைவுகள் செலவுகளாக
வேட்கையில் ஆயுள்
வரவுகளை எண்ணி...

புரிதல்

பிடித்துப் பார்த்தேன்
பிரவேசிக்க...
சிந்திச் சேர்த்தேன்
சித்தரிக்க...

பதறி விட்ட
சில நிமிடங்கள்..
சிதறி விட்ட
பல நொடிகள்...

நின்று ரசிக்க
நேரமில்லை...
ஓடும் கனவுகள்
சேரவில்லை...

கண்டுக் களித்த 
காட்சிகள்...
உணர்வுகள் போற்றும்
சாட்சிகள்...

மதம் பிடித்த 
உணர்ச்சிகள்...
பதமாக எழும்
புணர்ச்சிகள்...

இல்லையென
ஒன்றுமில்லை...
எல்லாமென
எதுவுமில்லை...

யாரும் அற்ற
வனமாய்...
எவரும் அறியா
பிண்டமாய்...

கால் சூடுத் தேடி...
அலைந்துப் பிரியும்...
ஆர்ப்பரித்து...
சுழன்ற...
மௌனம்....!!!!!

என் நெற்றியில்...

மார்கழிக் காற்றின்
மெல்லியத் தீண்டல்...
பௌர்ணமி இரவில்
படகு பயணம்...
கடற்கரை நிற்பில்
அலைகளின் பாதப்பூஜை...

மயங்கியக் கண்களில்
குறும்பின் தேக்கம்...
தயங்கிய இதழ்கள்
இசைக்கும் மௌனம்...
பின்னிய இதயங்கள்
படைக்கும் சரணங்கள்...

அதுவும்...
இதுவும்...
எதுவும்...
ஈடில்லை...
உன் அதரம் பதிக்கும்...
ஓர் முத்திரைக்கு!

நிசப்தம்

ஆழ்கடல் மௌனம்...
மை இருட்டு சத்தம்...
அடர்ந்தக் காட்டின்
சலசலப்பு...
ஒற்றை பயணத் துணை...
மெல்லிய இதய ஸ்பரிசம்...
பரிமாணங்கள்....!!!