Saturday, 25 February 2012

பேதை

வாசல் வந்து...
சுவாசம் பெற்று...
கொடுத்துச் சென்றாய்...
எஞ்சிய உயிர்த் துடிக்க...
கொஞ்சிய மெய்க் கரைய...
பிஞ்சுத் தடங்கள் பதித்து...
சின்ன விழிகள்
சிரிக்க...
வண்ணக் கனவுகள்
தீட்டி...
மிதக்க செய்து...
பிதற்ற வைத்தாய்...
.....
வார்த்தைகள் போதவில்லை!!

சங்கீதம்

மல்லிகை மணம் அறை முழுவதும் வீச, பாலில் குங்குமப்பூ நீந்த, உலகக் கனிவகைகள் கட்டுப்பாட்டுடன் காத்துக்கிடக்க, அவனும் இருந்தான் அவள் வருகைக்காக.

குடும்பச்சங்கீதத்தில் இணையும் இரு ராகங்களின் இரவு. மெட்டிச் சலங்கையும், கொலுசு சலங்கையும் போட்டிப் போட, முன்னழகும் பின்னழகும் இணைந்து நடக்க, தோழியர் புடை சூழ, அறை கதவுத் திறந்தது. நாணம் சற்று தூக்கலாக இருந்தது. 

அவன் புன்னகைப் புரிந்தப்படி அவளை அருகில் இழுத்தான், அவளோ தடுக்கி விழுந்தாள் அவன் மடியில். 

"என்ன இவ்வளவு நேரம்" 

புன்னகைப் புரிந்த அவள், அவன் மார்பில் கோலம் போட்டாள்.

"சரி வா" என கட்டித்தழுவினான்.

"பால் எடுக்கட்டுமா" என்ற அவளது கேள்விக்கு, கண்கள் சிமிட்டினான் குறும்பாக. அர்த்தம் புரிந்துக்கொண்ட அவள் வெள்ளிக் கிண்ணத்தில் பாலை ஊற்றி அவன் முன் நீட்டினாள். குறும்புப் பேச்சு பகிர்ந்தபடி இருவரும் பால் அருந்தியாயிற்று.

"அப்புறம் என்ன" என அவன் கேட்க, 

"நீங்க நாளைக்கு எத்தனை மணிக்கு வேலைக்குப் போனும்" அவள் கேட்டாள்.

"நாளைக்கு மட்டும் கொஞ்ச லேட்டாப் போலாம்" என சிரித்தான்.

"சரி வாங்கப் படுத்துக்கலாம்" என சொல்லிக் கொண்டு, அவளது படுக்கையைமட்டும் கீழே விரித்தாள்.

"குட் நைட் செல்லம்" என சொல்லியப்படி, அவளின் நெற்றியில் முத்தமிட்டு கட்டிலுக்கு விடைப்பெற்றான்.

விளக்குகளும் விடைப்பெற்றுக்கொண்டன.

"அம்மா அப்பா தேர்ந்தெடுத்தும், அவளிடம் மட்டும் சொல்ல தைரியம் வந்தது அபூர்வம். அதைவிட அவள் என் நிலைமையைப் புரிந்துக்கொண்டது என் அதிர்ஷ்டம். " அவன் மனம் இன்பத்தில் திளைத்தது.

"தாம்பத்தியத்தில் இன்பம் தரவும், பெறவும் எத்தனையோ வழிகள். கணவன் மனைவி இணைந்துப் பாடும் சங்கீதத்திற்கு வரை முறை அவரவர் வகுப்பதுதான்" என அவள் மனம் இறைவனுக்கு நன்றி செலுத்தியது, அவனை புரிந்துக்கொள்ள உதவியதற்காய்!

ராகங்கள் உறங்கின, சங்கீதமாய்.

கீதை

ஐந்தாம் வேதமாக
ஆறாம் பூதமாக
ஏழாம் படையாக
எட்டாம் ஸ்வரமாக
ஒன்பதாம் அதிசயமாக
பதினோராம் பாட்டாக
குருஷேத்திரக் கீதையென...
நம் காதல்
இப்பிரபஞ்சத்தில்!!

தோற்றம்

மின்னல் கொடிக்கொண்டு
நடைப் பயின்று...
வின்மீன் உடையணிந்து
மண்ணில் நிற்க...
தூரத்து மேகம்
தாகம் தணியும்
நினைத்துக் கொண்டிருக்க...
பூவிழித் தின்றுவிட
மறுஜென்மம் பூண்டுவிட்டது...!!

மச்சான்

பட்டணத்து ஆளுங்கப் போல
எழுத தெரியாது...
கிராமத்து எழுத்துக்கு
பழுது வராது
நீளமா ஒன்னும்
சொல்ல வரல...
சுருக்கமா
என்ன சொல்லனு தெரியல...
.......
ஏ மச்சான்
இம்புட்டு கஷ்டப்பட்றேன்ல...
ஏதாவது செஞ்சாதா என்னவா?!!!

பொருத்தம்

மனம் ஒத்துப்போக
மற்ற பொருத்தங்கள்
தணிந்துப் போக
தாகம் அடக்கிப் போனாய்
துளியாக...
ஒருமைக்கு
பன்மைச் சேர்த்தாய்
சேகரித்து!!

செயலாற்றல்

சிதறியன ஒட்டிக் கொல்ல...
பதறியன பக்குவம் அடைய...
மீறியன அடக்கிச் செல்ல...
நனைந்து நின்றேன்...
புத்தனாய் இறு-ந்தேன்...
மௌனம் களை-த்து
சித்தார்த்தனாக்கி எடு-த்-தாய்!